”தி பெல்லோஷிப் ஆப் த ரிங்” என்ற திரைப்படத்தில் கன்டாஃல்ப் த கிரே, சாருமான் தி வைட்டை எதிர்கொண்டபோது, அவர் மத்திய பூமியை பாதுகாக்க வேண்டிய செயலை செய்ய தவறிவிட்டார் என்பது தெளிவாகிறது. மேலும், சாருமன் சௌரோனுடன் கூட்டணி வைத்தான்! டேல்கியனின் உன்னதமான படைப்பை அடிப்படையாகக் கொண்ட அத்திரைப்படத்தின் இந்தக் காட்சியில், இரண்டு முன்னாள் நண்பர்கள், நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சாருமான் மட்டும் தன்னுடைய வழியில் உறுதியாய் நின்று தனக்குத் தெரிந்ததைச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். 

சவுல் ராஜாவுக்கும் தன்னுடைய வழியில் உறுதியாய் நிற்பதில் சிக்கல் இருந்தது. அவருடைய ஆட்சியில் ஓர் கட்டத்தில் “அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்தி விட்டான்” (1 சாமுவேல் 28:3). இது ஓர் நல்ல நடவடிக்கை. ஏனென்றால் மாயவித்தை காரியங்களில் ஈடுபடுவது கர்த்தருக்கு அருவருப்பானது (உபாகமம் 18:9-12) என்று ஏற்கனவே தேவன் அறிவித்திருந்தார். ஆனால் அவர் சில தோல்விகளை சந்தித்த பின்பு, பெலிஸ்தியர்களோடு யுத்தம்செய்தால் தேவன் தனக்கு வெற்றியைத் தருவாரா என்ற சவுலின் விண்ணப்பத்திற்கு தேவன் பதிலளிக்காதபோது, “அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்” (1 சாமுவேல் 28:7). சவுல் செய்யவேண்டியதை தவிர்த்து, முற்றிலும் தலைகீழானதை செய்ய விழைகிறான். 

அதிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் கழித்து, இயேசு தம் சீஷர்களைப் பார்த்து, “உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்” (மத்தேயு 5:37) என்று சொல்லுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதற்கு நாம் நம்மை அர்ப்பணித்திருந்தால், நம்முடைய சத்தியங்களைக் கடைப்பிடிப்பதும் உண்மையாக இருப்பதும் இன்றியமையாதது. தேவன் நமக்கு கிருபையளிப்பதால் அவற்றை செய்வதில் நாம் உறுதியோடு செயல்படுவோம்.